தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாகப் பாதுகாப்பு கேட்டு நடிகை காயத்திரி ரகுராம் போலீசில் தஞ்சமடைந்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அமைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அதன்படி “பாபர் மசூதி இருந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தியதில் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை வைத்து, அது இந்து கோயிலிருந்த இடம் என்றோ, தேவாலயம் இருந்த இடம் என்றோ, மசூதி இருந்த இடம் என்றோ கூற இயலாது” என்று குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், “கண்டெடுக்கப்பட்ட அந்த பொருள் கூம்பு போல் இருந்தால், அந்த இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் இருந்திருக்கும் என்றும், குவி மாடமாக இருந்தால் அங்கு மசூதி இருந்திருக்கலாம் என்றும், அசிங்கமான பொம்மைகள் இருந்திருந்தால், அந்த இடத்தில் இந்து கோயில்கள் இருந்திருக்கும்” என்றும் கூறியிருந்தார்.

இந்த கருத்துக்குச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததால், தான் பேசியதற்கு மனம் வருந்தி, அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். அந்த கருத்தையும், அவர் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, இது தொடர்பாகக் கடந்த வாரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகை காயத்ரி ரகுராம், “இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்குப் பார்த்தாலும் அடியுங்கள்” என்று சர்ச்சைக்குரிய வகையில், சம்பந்தமே இல்லாமல் பதிவிட்டிருந்தார். மேலும், இது தொடர்பாக “திறந்தவெளியில் விவாதிக்கத் தயாரா?” என்றும் அவர் திருமாவளவனுக்கு டிவிட்டர் மூலம் சவால் விடுத்திருந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவரது ஆதரவாளர்கள், பேரணியாகச் சென்று காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட முயன்றனர். ஆனால், அதற்குள் விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவரைக் கைது செய்தனர்.

இதனையடுத்து, டிவிட்டர் விதிகளை மீறி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் பதிவிட்டிருந்ததாக, அவரது கணக்கை, டிவிட்டர் முடக்கியது.

மேலும், அமைதியைச் சிதைக்கும் வகையில் செய்தி பரப்பிய நடிகை காயத்திரி ரகுராம் மீது, கடலூர் மாவட்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், நேரில் ஆஜராக வேண்டும் என்றும் காயத்திரி ரகுராமிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி, பாதுகாப்பு கேட்டு இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் வந்த நடிகை காயத்ரி ரகுராம், போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு அளித்தார்.

அப்போது, மனு கொடுக்க வந்த காயத்திரி ரகுராமை, பேட்டி எடுக்கச் செய்தியாளர்கள் போட்டிப்போட்டார்கள். ஆனால், பயத்தில், செய்தியாளர்களைத் தவிர்க்கும் விதமாக, அவர் பின் பக்க வாசல் வழியாகச் சென்றார். இதனால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.