வேலைக்காக வெளிநாடு சென்றவர்கள் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த 3 குடும்ப பெண்கள், திருவாரூரைச் சேர்ந்த பக்ருதீன், அசாருதீன் ஆகிய 2 ஏஜெண்டுகள் மூலம், வீட்டு வேலைக்காகக் கடந்த செப்டம்பர் மாதம்,குவைத் நாட்டிற்குச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, குவைத் ஏர்போட்டிலிருந்து அழைத்துக்கொண்டு சென்ற ஏஜெண்டுகள், 3 பெண்களையும் வீட்டு வேலைக்கு அனுப்பாமல், பாலியல் தொழிலில் ஈடுபடும் படி கட்டாயப்படுத்தப்பட்டு கடும் நெருக்கடி கொடுப்பதாகவும், இதனால் சாப்பாடு கூட கொடுக்காமல் தனி அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட 3 பெண்களும் தங்கள் வீட்டாருக்கு எப்படியோ போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர்களது குடும்பத்தினர், சம்மந்தப்பட்ட 2 ஏஜெண்டுகளிடம் முறையிட்டு, தங்கள் வீட்டுப் பெண்களைத் திருப்பி அனுப்பிவிடும் படி கெஞ்சியுள்ளனர். ஆனால் , அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றால் ஆளுக்கு ஒரு லட்சம் வீதம் மொத்தமாக 3 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர்.

இதனால், மேலும் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர், திருச்சியில் போலீஸ் ஐ.ஜி.யை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

இது தொடர்பாக, புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை உயர் அதிகாரிகள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கப் பதிவு செய்த போலீஸ்சார், விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
இதனிடையே, வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களை பாலியல் தொழிலுக்குக் குறிவைக்கப்படும் சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.