சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19 முதல் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக, கடந்த 1 ஆம் தேதி முதல், வரும் 30 ஆம் தேதி வரை 5 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்த முறை பல்வேறு பணிகளுக்கு அதிக அளவிலான தளர்வுகள் அளிக்கப்பட்டன.

இதனால், அரசு ஊழியர்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படத் தொடங்கின. தனியார் நிறுவனங்களும் செயல்படத் தொடங்கின. இதனால், தமிழகத்தில் இயல்பு நிலை மெல்லத் திரும்பியது.

ஆனால், தமிழகத்தின் தலைநகர் சென்னை தவிர பிற பகுதிகளில் கொரோனா தொற்று சற்று குறைந்து காணப்பட்டாலும், தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் குறையாமல் வழக்கத்தைவிட அதிகரித்துக் காணப்பட்டது.

குறிப்பாக, கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 2 ஆயிரத்தை நெருங்கு வந்தது. அத்துடன் சென்னையில் மட்டும் 1500 பாதிப்புகளை நெருங்கி வந்தது.

இந்நிலையில். முதலமைச்சர் பழனிசாமியுடன் மருத்துவ நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்தினர். அப்போது, கொரோனா பாதிப்பு பகுதிகளில் அளிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளைக் குறைக்க தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்தது.

இதனையடுத்து, தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்த விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19 முதல் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்துவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், வரும் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு முழு பொது முடக்கம் அமலில் இருக்கும் என்றும், தமிழக அரசு அறிவித்துள்ளது.

அத்துடன், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.