தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது,

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ்முஷாரப், 10 வது அதிபராகக் கடந்த 2001 ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்து வந்தார்.

அவர் அதிபராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி பாகிஸ்தானில் அவசர நிலையைப் பிரகடனம் செய்தார்.

இதனை எதிர்த்துக் கடந்த 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து, பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கைச் சிறப்பு நீதிமன்றம் சார்பில், 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த விசாரித்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்ததன் மூலம், தேசத்துரோக குற்றத்தைச் செய்துவிட்டதாக முஷாரஃப் மீதான குற்றச்சாட்டு, நிரூபிக்கப்பட்டது. அதன்படி, அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தற்போது உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், பாகிஸ்தானில் முன்னால் அதிபர் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதனிடையே, முஷாரஃப் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் பாகிஸ்தான் கொண்டுவரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அவர் தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் திரும்புவதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.