15 ஆயிரம் ரூபாய் கடனுக்கு 13 வயது மகளை பெற்றோர் திருமணம் செய்து கொடுத்த கொடூரம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கவுண்டனூரை சேர்ந்த 23 வயதான சரவணகுமாரிடம், கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளனர்.

இதனையடுத்து, அந்த தம்பதியால், வாங்கிய கடனை திரும்பிச் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக, பணத்திற்குப் பதிலாகப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் தங்களது 13 வயது மகளை, சரவணகுமாருக்குத் திருமணம் செய்து வைக்கக் கடன் வாங்கிய தம்பதி முடிவு செய்தனர்.

அதன்படி இரு வீட்டார் சம்மதத்துடன், கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி, குஜிலியம்பாறையில் 13 வயது சிறுமியைக் கட்டாயப்படுத்தி, சரவணகுமாருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

இதனையடுத்து, கடந்த 5 மாதங்களாக 13 வயது சிறுமியுடன், சரவணகுமார் குடும்பம் நடத்தி வந்தார்.

இதனால், இரவு நேரத்தில் தினம் தினம் சித்ரவதையைத் தாங்க முடியாத சிறுமி, வெறுத்துப்போய், தனக்குக் கட்டாயத் திருமணம் நடந்தது தொடர்பாக, குழந்தைகள் நல உதவி மையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்துக் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் சரவணகுமாரையும், அவரது பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜபர்படுத்தி, திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதனிடையே, 15 ஆயிரம் ரூபாய் கடனுக்காக, 13 வயது மகள் திருமணம் செய்து வைக்கப்பட்ட நிகழ்வு, அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.