டெல்லியில் பெண் போலீஸ் அதிகாரியை வழக்கறிஞர்கள் துரத்தும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

டெல்லியில் உள்ள தீஸ் அசாரி நீதிமன்றத்தின் வாகன நிறுத்துமிடத்தில், கடந்த 2 ஆம் தேதி அன்று, காவலில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும், அங்குள்ள வழக்கறிஞருக்கும் இடையே பிரச்சனை எழுந்தது.

இதில், ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள், காவலில் ஈடுபட்டிருந்த போலீசாரை கடுமையாகத் தாக்கி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசாரின் வாகனங்கள் தீ வைத்தனர்.

இதனிடையே, அங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ஒருவர் வழக்கறிஞர் குண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த கலவரத்தில், 20 போலீசாரும், 8 வழக்கறிஞர்களும் படுகாயம் அடைந்தனர்.

அத்துடன், வழக்கறிஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 5 வது நாளாக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின்போது, வழக்கறிஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரை ஒரு வாரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என்றுஇந்தியன் பார் கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. அப்படி, துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரை கைது செய்யத் தவறினால், வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே, கலவரத்தின்போது போலீசார் வாகனம் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட நிலையில், தீ எரிந்துகொண்டிருக்கும் வாகனத்தின் அருகில் காவல் துணை ஆணையர் மோனிகா பரத்வாஜ் நடந்து வருகிறார். அப்போது அவருடன் சில போலீசாரும் நிற்கிறார்கள். அந்த நேரத்தில் வழக்கறிஞர்கள் சிலர், மோனிகா பரத்வாஜை நோக்கி ஆக்ரோஷமாக ஓடி வருகிறார்கள். பின்னர், அவரை சூழ்ந்தபடியே, ஒரு கூட்டம் அவரை துரத்திக்கொண்டே செல்கிறது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இதனால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.