டெல்லியில் மோசமான அளவில் காற்று மாசடைந்துள்ளதால் சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து காற்று மாசடைந்து வருகிறது. இதனால், டெல்லியில் மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது.

கடந்த ஆண்டு இதேபோல் காற்று மாசடைந்து காணப்பட்ட நிலையில், வாகன போக்குவரத்து முறையில் ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை எண்ணுள்ள வாகன போக்குவரத்து முறை கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் தீபாவளி பண்டிகை நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டதால், குறைந்திருந்த காற்று மாசு, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, திடீரென்று அதிகரித்துள்ளது.

அதிக அளவிலான காற்று மாசு காரணமாக, சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் அதிக அளவிலான விபத்துக்கள் நடக்கின்றன. மேலும், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகத் தலைநகர் டெல்லியில், சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்று மாசில் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க, நவம்பர் 5 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் காற்று மாசு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அங்கு நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் பாதியிலேயே நிறுத்தவும், அதிக புகையை வெளியிடும் தொழிற்சாலைகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெடி வெடிக்கவும், குப்பைகளை எரிக்கவும் அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.