மின் கட்டணம் செலுத்த ஜூன் 6 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக, நீட்டிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தால், பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதுமக்கள் அத்திவாசிய தேவையின்றி, வெளியே வர வேண்டாம் என்றும், தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ஆம் தேதி வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ராஜசேகர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும், விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, இது தொடர்பாகப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “விவசாயிகளுக்கு மானியம் தரும் முடிவை தமிழக அரசிடமே விட்டு விட வேண்டும் என்றும், மாநில அரசு கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும்” என்றும், வலியுறுத்தினார். அத்துடன், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” என்றும், முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

முன்னதாக, 22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி தலா ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கினார். இடைநிலை மூலதன கடனுதவியாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பழனிசாமி, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வழங்கினார்.

அத்துடன், தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளின் விற்பனை நேரம் 2 மணி நேரம் நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாலை 7 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்க நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தேர்வு தேதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

இதனிடையே, கொரோனாவை தடுக்க அலட்சியமாக இருந்தது போல், 10 ஆம் வகுப்புத் தேர்வை நடத்துவதிலும் தமிழக அரசு அவசரம் காட்டுகிறது என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

அத்துடன், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளிவைத்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின், உரியக் கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மாணவர்களின் உயிருடன் விளையாடாமல் 10 ஆம் வகுப்புத் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.