புதிதாக 105 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,477ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுவினருடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின் போது, 12 குழுவினருடன் தங்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இன்று முதல் அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கி உள்ளனர்.

குறிப்பாக, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள நடைமுறை சிக்கல், அத்தியாவசியப் பொருட்களின் தேவை, ஊரடங்கு தளர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அறிக்கை அளிக்க உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், ஆலோசனையும் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமியுடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி மூலமாகக் கேட்டறிந்தார். அப்போது, தமிழகத்திற்குக் கூடுதலாகப் பரிசோதனை கருவிகள் வழங்க வேண்டும் என்று, முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே, பெரம்பலூரில் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், சக காவலர்கள் 24 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். வி.களத்தூர் காவல்நிலைய காவலர்கள் 24 பேர், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அரியலூரில் மெடிக்கலில் பணியாற்றிய 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் இருவரும் அறியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஈரோட்டில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 20 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்தது தொடர்பான ரத்த மாதிரி பரிசோதனை முடிவு இன்னும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

இப்படியாக ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் 1,477 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 17 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 193 பேர், 28 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பில் தற்போது உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 2,35,164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 2,11,467 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இதுவரை ஒரு கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 894 ரூபாய், அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.