கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருவதால், சென்னையில் முழு ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்படுமா?! என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பிற மாவட்டங்களைக் காட்டிலும், தலைநகர் சென்னையில் கொரோனா தன் கோர முகத்தைக் காட்டி வருகிறது. இதன் காரணமாக, சென்னையில் கடந்த சில நாட்களாக ஆயிரத்து 400 பேருக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சிறப்பு மருத்துவ குழுவினருடன், முதலமைச்சர் பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச்செயலாளர் க.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவைச் சேர்ந்த டாக்டர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் என்னென்ன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம், கொரோனா சிகிச்சை முறைகளில் செய்யவேண்டிய மாற்றங்கள் என்ன? உள்பட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

குறிப்பாக, இந்த ஆலோசனையின் போது சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளது. இதில், சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இன்றைய ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மேலும், மருத்துவக்குழுவின் ஆலோசனையைப் பெற்று, அதன் பின்னர் தமிழக அமைச்சரவையைக் கூட்டி முழு ஊரடங்கு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழக அமைச்சர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் தமிழக அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் வகையில் முக்கியமான அறிவிப்புகள் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய அறிவிப்புகள் சென்னை உள்பட நோய் தொற்று அதிகமாக உள்ள இடங்களில் ஊரடங்கினை கடுமையாக அமல்படுத்துவது குறித்து இருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.