உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48.40 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3.20 லட்சமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இதுவரை அதற்கு உலக நாடுகளால் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. அது தொடர்பான ஆராய்ச்சிகளும், முயற்சிகளும் தொடர்ந்துகொண்டே வருகிறது.

எனினும், கொரோனா வைரசுக்கு உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்கா தான், மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளது. ஆனாலும், கடந்த சில நாட்களாக கொரோனா வைரசின் தாக்கம் சற்று குறைந்துள்ளதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 15,50,294 ஆக உயர்ந்துள்ளது, அதேபோல், கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91,981 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன், ரஷ்யா, பிரேசில் ஆகிய 5 நாடுகளில் மட்டும் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 25 ஆயிரம் புதிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8 ஆயிரத்து 926 புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால், அந்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்து 77 ஆயிரமாகவும், உயிரிழப்பு 27 ஆயிரத்து 650 ஆகவும் உயர்ந்துள்ளது.

இத்தாலியில் கடந்த மார்ச் 9 ஆம் தேதிக்குப் பிறகு முதல் முறையாக, நேற்று ஒரு நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 145 ஆக குறைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48.40 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால், உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கி வருகிறது. அத்துடன், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,20,130 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், உலகம் முழுவதும் கொரோனா வைரசிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,07,371 ஆக உயர்ந்துள்ளது.