உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை 22.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1.54 லட்சமாக அதிகரித்துள்ளது.

உலகத்தையே ஆட்டி படைக்கிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ். கொரோனா வைரஸ் தோன்றி இதுவரை 5 மாதங்கள் ஆகி உள்ள நிலையில், அதன் வேகம் குறைந்ததாக இல்லை. நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ஆப்பிரிக்க கண்டத்தில் கொரோனா பாதிப்பு 120 கோடியை எட்டக்கூடும் என்று ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது. உடனடியாக ஆப்பிரிக்க கண்டம், தடுப்பதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்தாவிட்டால், அங்கு கொரோனா பாதிப்பால் 3 லட்சம் பேர் பலியாவார்கள் என்று ஐ.நா ஆப்பிரிக்க பொருளாதார ஆணையம் எச்சரித்து உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 32,165 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை
7,09,735 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில், நேற்று ஒரே நாளில் 2,535 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் அங்கு, தற்போது பலி எண்ணிக்கை 37,154 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 2 கோடி பேர் வேலையிழந்துள்ளனர்.

சீனாவின் உகான் நகரில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2,579ல் இருந்து 3,869 ஆக அதிகரித்துள்ளதாகச் சீனா அறிவித்து உள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டிலிருந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 290 பேர் உயிரிழந்தது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சீனாவில் மொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 632 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் 40 ஆயிரம் பேர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்நாட்டின் சுகாதார நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சவுதி அரேபியாவில் இதுவரை கொரோனாவுக்கு 7,142 பேர் பாதிக்கப்பட்டள்ளனர்.

இந்தியாவிலிருந்து நேற்று பாகிஸ்தான் சென்ற அந்நாட்டவர்கள் 41 பேரில் 2 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக உலக அளவில் கொரோனா நோய் தொற்றினால் இதுவரை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 241 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், உலகம் முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 22.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 71 ஆயிரத்து 577 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.