கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு விதவிதமான பல புதிய அறிகுறிகள் தோன்றுவதாக, மருத்துவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

உலகத்தையே ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் ஒரு பக்கம் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், மற்றொரு புரம் கொரோனா தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

இப்படி மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில், கொரோனா பாதித்தவர்களுக்குப் பல புதிய அறிகுறிகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக வறட்டு இருமல், காய்ச்சல், உடல் சோர்வு ஆகியவை கொரோனாவின் பொதுவான அறிகுறிகள் என்று கூறப்பட்டு வந்தன. இவற்றுடன் உடல் வலி, சளி, தொண்டை வறட்சி போன்றவையும் கொரோனாவின் அறிகுறிகளாக உலக சுகாதார அமைப்பு தொடர்ச்சியாகக் கூறியது.

அத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு அரிதாக வயிற்றுப்போக்கும் ஏற்படுவதாகப் பின்னர் கடுப்படிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு விதவிதமான பல புதிய அறிகுறிகள் தோன்றுவதாக, முதலில் குழப்பமடைந்த மருத்துவர்கள், தற்போது அதன் புதிய அறிகுறிகள் பற்றி கூறியுள்ளனர்.

அதன்படி உடல் எரிச்சல், கண் சிவப்பது, பாதங்கள் அரிப்பு ஆகிய அறிகுறிகள் எல்லாம், உலகளவில் கொரோனா பாதித்தவர்களுக்கு புதிய அறிகுறிகளாகத் தோன்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதத்தின் அடிப்புறத்திலும், பக்கவாட்டிலும் தோலின் நிறம் பழுப்பாக மாறுவதுடன், அரிப்பு ஏற்படுவதும் கொரோனாவின் புதிய அறிகுறி என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், கொரோனா பாதித்த சிலருக்கு கை மற்றும் விரல்களிலும் இதுபோன்ற அரிப்பு ஏற்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த புதிய வகையான அறிகுறிக்கு 'கோவிட் பாதம்' என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, கொரோனா வைரஸ் சுவாச மண்டலத்தின் மேல் பகுதியைப் பாதிக்கும் என்றும், அதன் தொடர்ச்சியாகக் கண்கள் இளஞ்சிப்பாக மாறுவதும் கொரோனாவின் புதிய அறிகுறிகள் என்றும் இங்கிலாந்து கண் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.