சென்னையில் முழு முடக்கக் காலத்தில் வாகனங்கள் செல்வது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக ஜூன் ஒன்றாம் தேதி முதல், வரும் 30 ஆம் தேதி வரை 5 வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால், இந்த முறை கொரோனா பாதிப்பு சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் வழக்கத்தை விட சற்று வேகமாகப் பரவத் தொடங்கியது.

இது குறித்து ஆலோசனை நடத்திய தமிழக அரசு, இந்த 5 வது ஊரடங்கில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மட்டும் நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்தது. இதனால், ஏற்கனவே அளிக்கப்பட்ட தளர்வுகள் அனைத்தும் நீக்கப்பட்டது.

குறிப்பாக, ஜூன் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை, தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில், எந்தவித அனுமதி சீட்டுமின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும், அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை வங்கிகளுக்குச் செல்லும் ஊழியர்கள் அடையாள அட்டையைக் காண்பித்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

21 ஆம் தேதி மற்றும் 28 ஆம் தேதி ஆகிய 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், பால் நிலையங்கள், அமரர் ஊர்திகள் தவிர மற்ற கடைகளுக்கும், வாகனங்கள் அனுமதியில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

எனினும், அவசர மருத்துவ தேவைக்கு மட்டும் பிற வாகனங்கள் பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வேலைக்கு செல்வோர் அங்கேயே தங்கி பணிபுரிய அனுமதி உண்டு என்றும், ஆனால் தினமும் வேலைக்குச் சென்றுவர அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இ பாஸ் வைத்திருப்பவர்கள் அதைப் பெரிய அளவில் ஜெராக்ஸ் எடுத்து காவல்துறையினருக்குத் தெரியும்படி காண்பிக்க வேண்டும் எனவும் சென்னை காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

அதேபோல், போலியான இ பாஸ் வைத்திருப்பது தெரியவந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

முக்கியமாக, பொது முடக்கத்தின்போது அத்தியாவசிய தேவைக்காகக் கடைகளுக்குச் செல்லும் மக்கள் தங்களது வாகனங்களைப் பயன்படுத்தாமல், 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் நடந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்தவித அனுமதிச் சீட்டுமின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும், அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.