சென்னையில் 2வது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நர்ஸ் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீசார் உட்பட பலருக்கும் கொரோனா தனது கோர முகத்தைக் காட்டி, அவர்களையும் கடுமையாகத் தாக்கி வருகிறது வருகிறது.

இதனிடையே, சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியிலிருந்த கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 53 வயதான நர்ஸ் ஒருவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தார்.

இந்நிலையில், அவர் மீண்டும் பணிக்குத் திரும்பிய நிலையில், அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அவருக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வந்தது.

இதனையடுத்து, வீடு திரும்பிய அவர், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதனைத்தொடர்ந்து, மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டது. மீண்டும் அவர் பரிசோதனை செய்தபோது, 2 வது முறையாக கொரோனா தொற்று பரவி இருப்பது தெரிய வந்தது. இதனால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நர்ஸ் தற்போது உயிரிழந்துள்ளார். அவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை கடந்த சில நாட்களுக்கு முன்பு நர்ஸ் கண்காணிப்பாளர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.