சென்னையில் சில்லறை பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளான பயணி ஒருவர், பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தி.நகர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாகக் கமலக்கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று காலை தனது மகனுடன் கோயம்பேடு செல்வதற்காக தி.நகரில் உள்ள அரசு மாநாகரப் பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது, டிக்கெட் எடுக்கும்போது, அவரிடம் சில்லை இல்லாததால், 500 ரூபாய் நோட்டை கொடுத்து 2 டிக்கெட் கேட்டுள்ளார்.

இதனால், சில்லறை இல்லை என்று கூறி, நடத்துநர் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இருவரையும் இறக்கிவிட்டுவிட்டார். இதனையடுத்து, அடுத்தடுத்த பேருந்துகளில் ஏறும்போது, இதே சில்லறை பிரச்சனை காரணமாக அவர்களை யாருமே பேருந்தில் ஏற்றவில்லை.

இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான கமலக்கண்ணன், ஆட்டோவில் ஏறி கோயம்பேடுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த ஆட்டோ தேனாம்பேட்டை அருகில் உள்ள ஒரு சிக்னலில் நின்றுள்ளது.

அந்த சிக்னலில், முதன் முதலில் கமலக்கண்ணனை இறக்கிவிட்ட 23C பேருந்தும் நின்றுள்ளது. இதனைக் கவனித்த கமலக்கண்ணன், ஆட்டோவிலிருந்து இறங்கி, கீழே கிடந்த கல்லை எடுத்து, பேருந்தின் முன் பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பயணிகள், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கிழே இறங்கி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும, பேருந்தும் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த போலீசார், கமலக்கண்ணனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அப்போது, சில பயணிகள் மாநாகரப் பேருந்தில் சில்லறை இருந்தால் மட்டுமே பயணிக்க முடிகிறது என்றும், அவசரத்தில் ஏறி 100, 200 ரூபாய் பணம் கொடுத்தால், நடத்துநர்கள் கீழே இறக்கிவிடுவது வாடிக்கையாக நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதனையடுத்து, பேருந்தின் நடத்துநர் மற்றும் கமலக்கண்ணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.