சென்னையில் தலைமறைவு ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகத்தின் முக்கிய போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, சென்னையில் நடைபெற்ற குற்ற நிகழ்வுகள், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றிய விபரங்கள், கைது மற்றும் தலைமறைவு குற்றவாளிகள் விபரங்கள், முடிக்கப்பட்ட வழக்குகள் உள்ள குற்றவாளிகள், அதேபோல் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்புடைய குற்றவாளிகள் என அனைத்து தகவல்களையும் துணை ஆணையர்கள் ஆர்.திருநாவுக்கரசு, சுதாகர் ஆகியோரிடம் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கேட்டறிந்தார்.

இதனையடுத்து, சில அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, தலைமறைவு ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைக்க, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், போலீஸ் அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஆள் கடத்தல்,கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நடந்து வருவதால், அவற்றை முற்றிலுமாக தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் அவர் உதிரவிட்டுள்ளார்.

இதனிடையே, சென்னையில் உள்ள 135 காவல் நிலைய போலீசாரும், தங்கள் எல்லைக்கு உட்பட்ட ரவுடிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், ரவுடிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.