3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி, கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளிக்கூடம் கொஞ்சம் நடந்து செல்லும் தூரம் என்பதால், சிறுமி தினமும் பள்ளிக்கு நடந்து செல்வதும், பள்ளி முடிந்து நடந்தே வீட்டிற்கு வருவதும் வழக்கம். அதன்படி, நேற்று மாலை பள்ளி முடிந்து சிறுமி வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்வி அலுவலகத்தில் உதவியாளராக இருந்து ஓய்வு பெற்ற எம்.ஜி.ஆர்.நகர் ஜாகிர் உசேன் தெருவைச் சேர்ந்த 67 வயதான முருகன், சிறுமி தனியாக வருவதை நோட்டமிட்டு, சிறுமியை வழிமறித்து ஆசைவார்த்தைகள் கூறி, அருகில் உள்ள தனது வீட்டிற்கு எப்படியோ அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டிற்குச் சென்றதும், சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமி, அங்கிருந்து வெளியே ஓடிவந்து, வேகமாகத் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்குத் தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறி, அழுதுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், முருகனைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மேலும் 2 சிறுமிகளிடம் முருகன், இதேபோல் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.