ஊரடங்கு காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க சென்னை மாநகராட்சி 8 யோசனைகளைப் பரிந்துரை செய்துள்ளது.

கொரோனாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பெரும்பாலான மக்கள், தங்களது வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால், பலரும் ஒருவிதமான மன அழுத்தத்திற்கு ஆளாவதாகக் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், பொதுமக்கள் மன அழுத்தத்திலிருந்து வெளியேறும் வகையில், சென்னை மாநகராட்சி 8 யோசனைகளை முன்வைத்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் கார்ட் ஒன்றைப் பகிர்ந்துள்ளது. அதில், “நெருக்கடியான சூழலில் மன அழுத்தம், குழப்பம், சோகம், பயம் மற்றும் கோபம் ஏற்படுவது இயல்பு” என்று குறிப்பிட்டுள்ளது.

“நம்பிக்கைக்குரியவர்களிடம் பேசுவது ஆறுதலாக இருக்கும் என்றும், நண்பர்கள் மற்றும் தங்களது குடும்பத்தினரிடம் தொலைப்பேசியில் பேசுவது நல்ல சிந்தனைகளைத் தரும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

“வீட்டிலேயே இருக்கும்போது சுகாதாரமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், சரியான உணவு, தூக்கம், உடற்பயிற்சி” ஆகியவை நல்ல மன ஆறுதலைத் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சரியான தகவல்களைத் தெரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும் என்றும், உலக சுகாதார மையம் போன்ற நம்பகத்தனமான நிறுவனம் வழங்கும் செய்திகளை வாசிக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்திப்பட்டுள்ளது.

“ஊடகங்களில் செய்திகளைக் கண்டு மன அழுத்தம் ஏற்பட்டால் செய்திகள் காண செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், “வாழ்க்கையில் கடினமான சூழலை எதிர்கொள்ள, நீங்கள் பயன்படுத்திய யுக்திகளைப் பட்டியலிட்டு சவாலான இந்த சூழலையும் எதிர்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும்” என்றும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

“அதிக அளவிலான மனச் சோர்வு ஏற்பட்டால், மருத்துவ நிபுணர் அல்லது ஆலோசகருடன் உரையாடவும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்குத் தேவையான உதவிகளைப் பெற சரியாகத் திட்டமிட வேண்டும்” என்றும் வலியுறுத்தி உள்ளது.

அதே நேரத்தில் மன அழுத்தத்தை போக்குகிறேன் என்று கருதி புகைப்பிடித்தல், மது அருந்துதல் அல்லது பிற மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது” என்றும் சென்னை மாநகராட்சி ஆலோசனை வழங்கி உள்ளது.