சென்னையில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளதால், சென்னை மக்கள் கடும் பீதியடைந்தள்ளனர்.

கொரோனா வைரஸ், தமிழகத்தின் பிற மாவட்டங்களை காட்டிலும், சென்னையில் மையம் கொண்டு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் சென்னையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 27 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர். இதில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேர், கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தனர்.

அதேபோல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் 4 பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 2 பேரும் இன்று உயிரிழந்தள்ளனர்.

இப்படியாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னையில் இதுவரை 27 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

மேலும், சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளியின் உருவப்படத்திற்கு டி.ஜி.பி. திரிபாதி, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அத்துடன், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 5,626 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 4,549 பேருக்கம், தேனாம்பேட்டையில் 4,334 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 3,801 பேருக்கும், அண்ணாநகரில் 3,636 பேருக்கும், திருவிக நகரில் 3,160 பேருக்கும், அடையாறு பகுதியில் 2,069 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை ஆண்கள் 60.20 சதவீதம் பேரும், பெண்கள் 39.79 சதவீதம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.