போலீசார் வேலை நிறுத்தம் காரணமாக, பிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரேசில் சட்டப்படி, போலீசார் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாத பிரேசிலின் சீரா மாகாணத்தை சேர்ந்த போலீசார், ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்திக் கடந்த 19 ஆம் தேதி முதல், தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போலீசார், சிறைத் தண்டனையைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதைப்பற்றியெல்லாம் துளிகூட கவலைப்படாத போலீசார், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், முதற்கட்டமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆனாலும், பணி நீக்கம் குறித்து துளியும் அஞ்சாத போலீசார், போராட்டத்தைக் கைவிட மறுத்து, வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இதன் காரணமாக, அங்குள்ள சீரா மாகாணத்தில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கொலைகள் இதுவரை இல்லாத அளவுக்கு, மிக அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

முக்கியமாக, கடந்த 5 நாட்களில் மட்டும் கிட்டதட்ட 147 கொலைகள் அங்கு நடந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போலீசார் இல்லாமல் இருப்பதால் தான், இந்த கொலைக் குற்றங்கள் நடந்துள்ளதாகக் கருதிய அந்நாட்டு அரசு, சீரா மாகாணம் முழுவதும் ராணுவத்தை இறக்கி உள்ளது.

இதனால், சீரா மாகாணத்தில் ராணுவ வீரர்கள் அனைவரும் துப்பாக்கியுடன் வலம் வருவதால், அந்த பகுதிகளில் ஒருவித பதற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், பிரேசிலில் கடந்த 5 நாட்களில், 147 கொலைகள் நடந்துள்ள சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.