திட்டமிட்டபடி நாளை மறுநாள் ஐ.பி.எல். ஏலம் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

அதன்படி, நேற்று குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேடுவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் மிகப் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில், பல லட்சம் பேர் கலந்துகொண்டனர்.

இதனால், நாளை மறுதினம் கொல்கத்தாவில் நடைபெற இருந்த ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் நடைபெறுவதில் சந்தேகம் எழுந்தது. 

இதனையடுத்து, திட்டமிட்டபடி நாளை மறுநாள் கொல்கத்தாவில் ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

அதன்படி, 2020 ஆம் ஆண்டுக்கான 13 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வருகிற 19 ஆம் தேதி, மாலை 3:30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், 73 இடங்களுக்கான ஏலத்தில் இதுவரை 332 வீரர்கள் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், 29 வீரர்கள் மட்டுமே வெளிநாட்டு வீரர்கள் எனவும், மற்ற இடங்களில் இந்திய வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

கிறிஸ் லின், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், டேல் ஸ்டெய்ன், ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளிட்ட சில வீரர்களுக்கு அதிகபட்ச அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.