73 வயது ஆணும் 33 வயது பெண்ணும் திருமணம் செய்துகொள்ளுவதாக அறிவித்துள்ளது வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 33 வயதான ரேச்சல் ராபர்ட்ஸ் என்ற இளம் பெண், தனது தந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, காரில் தனது வீட்டிற்கு அவர் சென்றுகொண்டிருக்கும்போது, அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் 73 வயதுடைய நெவ் மெக்டேர்மோட் என்பவரைச் சந்தித்துள்ளார்.

அப்போது, அவருக்குக் காலில் அறுவை சிகிச்சை செய்து, கட்டுப்போட்டு நடக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால், அவருக்கு ரேச்சல் ராபர்ட்ஸ் தனது காரில், லிப்ட் கொடுத்து உதவி உள்ளார். அப்போது முதல் இருவரும் அறிமுகம் ஆகி, இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட்டது.

அது முதல் இருவரும் நட்பாகப் பழகி வந்தனர். தொடர்ந்து, இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்தனர். அதே நேரத்தில், இருவருக்குள்ளும் பரஸ்பரமான காதல் இருந்தாலும், வயது வித்தியாசம் காரணமாக, அதை ஒருவரை ஒருவர் வெளிக்காட்டாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், ரேச்சல் ராபர்ட்ஸின் தந்தை, வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து, தனது தோழி ரேச்சலுக்கு, நெவ் மெக்டேர்மோட் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது, வீட்டில் தந்தையை இழந்த நிலையில், ரேச்சல் தனிமையில் தவித்துள்ளார். அவருக்கு ஆறுதலாக நெவ் மெக்டேர்மோட் இருந்து வந்துள்ளார். அப்போது, இருவரும் மனம் விட்டு, தங்களது காதலை ஒரு நேரத்தில் வெளிப்படுத்தி உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, இவர்களது காதலுக்கு இரு வீட்டார் தரப்பில் உள்ள உறவினர்களும், நண்பர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.