அரபிக்கடலில் ஒரே நேரத்தில் 2 புயல்கள் மையம் கொண்டுள்ள நிகழ்வு, வரலாற்றில் அறிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

அரபிக்கடல் பகுதியில் ஏற்கனவே கியர் புயல் உருவாகி உள்ள நிலையில், தற்போது அதே கடல் பகுதியில் மற்றொரு புயல் புதிதாக உருவாகி உள்ளது.

அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக மாறியது. அந்த புதிய புயலுக்கு மஹா புயல் என்று ஏமன் நாடு பெயர் சூட்டியுள்ளது.

இந்த மஹா புயலானது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 320 கிலோ மீட்டர் தூரத்தில் உருவாகி, அதன்பிறகு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமா அதிகபட்சமாக 125 கிலோ மீட்டர் வேகத்திலும், குறைந்தபட்சமாக 75 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இன்று தீவிர புயலாக வேகமெடுக்கும் மஹா புயல், நாளைய தினம் அதி தீவிரப் புயலாக உருமாறுகிறது. இந்த மஹா புயலானது, கேரளா பகுதியிலிருந்து லட்சத்தீவு, மாலதீவுகளைக் கடந்து ஓமன் நாட்டை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த அதி தீவிரப்புயலின் நிலை, வரும் 4 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும், இதனால் அதிகபட்சமாக 190 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த 2 புயல்கள் தொடர்பான அதிகாரப் பூர்வமான வரைப்படங்களை, இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாகத் தமிழகத்தில், புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளக் கன்னியாகுமரி, தூத்துக்குடி மின்துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் 35 பேர் கொண்ட 10 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 10 குழுவினரும், மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற துறையினருடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.