உடல் நலக்குறைவால் நடிகர் அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் அமிதாப்பச்சன், கடந்த 1982 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கினார். அப்போது, பலத்த காயம் அடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் குணமடைந்தார். ஆனால், அந்த விபத்திலிருந்து அவரது கல்லீரல் பலகீனம் அடைந்து, அது தொடர்பான பிரச்சனை புதிதாக எழுந்தது.

கல்லீரல் தொடர்பான பிரச்சனைக்கு அவர் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் தொடர்ந்து சுறுசுறுப்பாக நடித்து வந்தார்.

இதனிடையே, கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசரமாக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு இணையான தனி அறை ஒதுக்கப்பட்டது. அங்கு அவருக்குத் தொடர்ந்து 3 நாட்களாகத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, அமிதாப்பச்சனுக்கு 75 சதவீதம் கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது, அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமிதாப்பச்சனை, குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.