அமெரிக்கா விமான விபத்தில் குழந்தைகள் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாநிலத்தில் தனியாருக்குச் சொந்தமான ‘பிலாட்டஸ் பி.சி.12’ ரக சிறிய விமானம் ஒன்று, அங்குள்ள சேம்பர்லெய்ன் என்னும் விமான நிலையத்திலிருந்து நேற்று 12 பேருடன் புறப்பட்டுச் சென்றது.

அப்போது, விமானம் புறப்பட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை மேலே உயரப் பறந்த நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், திடீரென்று கீழே நொறுங்கி விழுந்தது.

இந்த விபத்தில், விமானி மற்றும் 2 குழந்தைகள் உட்பட மொத்தம் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அந்நாட்டு போலீசார், புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விமான விபத்து நிகழ்ந்துள்ளதாகக் கூறினார். மேலும், இது தொடர்பாகத் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்குப் பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும் என்றும் தெரிவித்தனர்.

இதனிடையே, அமெரிக்காவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம், அந்நாட்டு மக்களைச் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.