குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை என்று அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாகப் பதில் அளித்துள்ளார்.

திருச்சியில் நேற்று நடைபெற்ற துக்ளக் விழாவில் கலந்துகொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி, “ஓ.பி.எஸ்.யை ஜெயலலிதா சமாதியில் அமரச் சொன்னதே நான்தான்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இது தொடர்பாகச் சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், ”துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். குறித்த, குருமூர்த்தியின் பேச்சு ஆணவத்தின் உச்சம், திமிர்வாதத்தின் உச்சம், இவ்வளவு திமிர் கூடாது. அவருக்கு நாவடக்கம் தேவை. பல சந்தர்ப்பங்களில் அதிமுகவின் மீது கை வைத்து, அதனால் பிறகு வாங்கிக் கட்டிக் கொண்ட வரலாறும் உண்டு” என்று காட்டமாகப் பதில் அளித்தார்.

மேலும், தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் தான், அரசியல் மாற்று என குருமூர்த்தி பேசியது குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இது தொடர்பாக முதலமைச்சரும், நானும் கடந்த 15 நாட்களாகப் பதில் அளித்து வருகிறோம்” என்றார். அத்துடன், “எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஆகியோர் சினிமா துறையில் நட்சத்திரங்களா ஜொலித்தார்கள், அதேபோன்று, அவர்கள் அரசியலிலும் நட்சத்திரங்களாக ஜொலித்தார்கள். அவர்களைப்போல இவர்கள் அப்படி அரசியலில் ஜொலிக்க மாட்டார்கள். கமல் கட்சி ஆரம்பித்து, அவருக்கு வாக்கு வங்கி என்னவென்று தெரிந்துவிட்டது. ரஜினிக்கு கட்சி ஆரம்பித்ததும், அவருக்கும் இதே நிலைதான் வரும்” என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.