மே 17 ஆம் தேதிக்குப் பிறகு, தமிழகத்தில் 50 சதவீத பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும் 40 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த 4 ஆம் தேதி முதல் 3 வது முறையாக, மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பல பணிகளுக்குத் தளர்வுகளும் மத்திய - மாநில அரசுகள் வழங்கி உள்ளன. அதேபோல், டாஸ்மாக், கோயில் பணிகளுக்கு அனுமதி என்று படிப்படியாக சில தளர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஊரடங்கு காலம் முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகளுடன் அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், பணிமனைகளுக்கு இன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இது குறித்து, தமிழகத்தின் 8 போக்குவரத்துக் கழகத்திற்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகள் உடன், அரசுப் பேருந்துகள் இயங்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

“அதன்படி ஒட்டுனர், நடத்துநர்களுக்கு முகக்கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி வழங்கப்படும் என்றும், பேருந்து இயக்குவதற்கு முன், அனைத்து ஊழியர்களும் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்றும், வலியுறுத்தி உள்ளார்.

“பயணிகள் இருக்கையில் அமர புதிதாக மார்க் செய்ய வேண்டும் என்றும், பேருந்தில் நின்று பயணம் செய்தால் 6 அடி இடைவெளி அவசியம்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

“பேருந்தின் ஜன்னல்கள் கட்டாயமாகத் திறந்திருக்க வேண்டும் என்றும், பேருந்து நிலைய நிறுத்தத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த வேண்டும்” என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், “பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், தவறினால் பயணம் செய்ய அனுமதிக்கப்படக் கூடாது” என்றும், அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, “வரிசையில் நின்று பயணிகள் அனைவரும் பேருந்துகளில் ஏற வேண்டும் என்றும், பயணிகள் டிக்கெட் எடுக்க எளிமையாக்கும் வகையில், E- pay, Google pay போன்றவை மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும்” என்றும், போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தெரிவித்துள்ளார்.