காஞ்சிபுரம் அருகே டாஸ்மாக் கடையில் 3 கிலோமீட்டர் தூரம் மிக நீளமான வரிசையில் காத்துநின்று, பொதுமக்கள் மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அனைத்து தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், டாஸ்மாக் கடைகள் உட்பட அனைத்து விதமான கடைகளும் மூடப்பட்டன.

இதனையடுத்து, கடந்த 4 ஆம் தேதி முதல் 3 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்து இருந்தது.

அதன்படி, சுமார் 43 நாட்களுக்குப் பிறகு, தமிழகத்தில் இன்று காலை 10 மணி அளவில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதற்காக, அதிகாலை முதலே மது பிரியர்கள், வரிசையில் வந்து காத்திருந்தனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் மற்றும் கீழ்கதிர்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் காலை முதலே சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு, பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

மேலும், அந்த பகுதியில் மதுபிரியர்கள் இளைப்பாறுவதற்காக, சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதனால், கால் கடுக்க வரிசையில் காத்து நின்று வருபவர்கள், கடைகளுக்கு முன்பு சிறிது நேரம் அமர்ந்து செல்லும் வசதியும் செய்யப்பட்டுள்ளதால், மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அத்துடன், காலை 10 மணி முதல் அரசு மதுபான கடைகளில் விற்பனை துவங்கிய நிலையில், ஒவ்வொரு கடையிலும் 25 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், அனைத்தும் இன்று ஒரே நாளில் விற்றுத் தீரும் என்றே கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் இன்று காலை கருப்புச்சின்னம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார். சென்னை அண்ணாநகர் இல்லத்தில் கருப்புச்சட்டை, கருப்பு துண்டுடன் வைகோ, போராட்டத்தில் ஈடுபட்டார். ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், தங்கபாலு உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கருப்பு சின்னத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.