கோர தாண்டவம் ஆடும் கொரோனா வைரசுக்கு, அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரஸ், சீனாவிலிருந்து பரவியதாகக் கூறப்பட்டாலும், சீனாவை விட பல மடங்கு அமெரிக்காவையே, அது ஆட்டி படைத்து வருகிறது.

சீனாவில், கொரோனா தாக்கம் முற்றிலும் குறைந்த நிலையில், அங்கு இயல்பு நிலை திரும்பி உள்ளதாகச் சீனா தற்போது அறிவித்துள்ளது. ஆனால், அமெரிக்காவிற்குள் ஊடுருவிய கொரோனா என்னும் கொடிய வைரஸ், பாகுபாடு இன்றி அங்கு பெரும்பாலான மக்களை விட்டு வைக்கவில்லை.

குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் ஆண்களை அதிகம் தாக்கி உள்ளது கொரோனா வைரஸ். இதுவரை அமெரிக்காவில் 4 லட்சம் பேர் வரை கொரொனா வைரஸ் தாக்கி உள்ளது.

கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்குள்ளாகவே உயிரிழப்பு நிகழ்ந்த நிலையில், கடந்த சில நாட்களாக 1000, 1200, 1400 ஆக நாள்தோறும் உயிரிழப்பு நிகழ்ந்தது.

இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும், இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனாவின் கொடிய தாண்டவத்தில் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இதுவரை 12,837 ஆக அதிகரித்துள்ளது. இதனால், அமெரிக்கா மக்கள் அனைவரும் உயிர் பயத்தில் உரைந்துபோய் உள்ளனர்.

இதனிடையே, கொரோனாவுக்கு லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, உதவுவதற்கு டிரம்ப் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.