சீனாவை பழிவாங்கவும், பாடம் கற்பிக்கவும் எல்லைக்குப் புறப்பட்ட 10 இந்திய சிறுவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்த சம்பவம் வைரலாகி வருகிறது.

இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் சீன ராணுவத்துடனான மோதலின்போது, இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து, இந்திய எல்லைப் பகுதியில் போர் விமானங்களை விமானப்படை தயார்நிலையில் நிறுத்தி வைத்துள்ளது. இதனை விமானப் படை தலைமை தளபதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதனால், இந்திய எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது. மேலும், சீனாவுக்கு எதிரான போருக்கு இந்தியா தயாராகிவிட்டதாகவே தகவல்கள் வெளியானது.

இதன் தொடர்ச்சியாக சீனா பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று செய்திகள் தொடர்ந்து வைரலாகி வந்தன.

இந்நிலையில், 20 இந்திய வீரர்களைக் கொன்ற சீனாவை பழிவாங்கவும், சீனாவுக்கு பாடம் கற்பிக்கும் விதமாகவும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 10 சிறுவர்கள் எல்லைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அப்போது, ஊரடங்கு காரணமாகச் சாலையில் ஆங்காங்கே பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார், அந்த 10 சிறுவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில், “ 20 இந்திய ராணுவ வீரர்களைக் கொன்ற சீனாவை பழிவாங்கவும், அவர்களுக்குப் பாடம் புகட்டவும் எல்லைக்கு செல்வதாக” சிறுவர்கள் கூறியுள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுவர்களுக்கு சரியான அறிவுரை கூறி, அவர்களை வீட்டிற்கே மீண்டும் அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, சீனாவை பழிவாங்க 10 இந்திய சிறுவர்கள் எல்லைக்கு புறப்பட்டுச் சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.