10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாத இறுதிக்குப் பிறகு வெளியிடப்படும் என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த மார்ச் 27 ஆம் தேதி நடைபெற இருந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் 15 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

அத்துடன், கொரோனா தாக்கம் காரணமாக, ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், 10 ஆம் வகுப்ப பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்தது.

இது தொடர்பாகச் சென்னையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உறுதியாக நடத்தப்படும்” என்று உறுதிப்படத் தெரிவித்தார்.

மேலும், “12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி நடைபெறவேண்டிய, தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டதாகவும், கடந்த மார்ச் 24 ஆம் தேதி நடந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடியாத பல மாணவர்களுக்கு வேறொரு தேதியில் தேர்வு நடைபெறும்” என்றும், கூறினார்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், “10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “உயர்மட்டக்குழு கூட்டத்திற்குப் பின் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு பொதுத்தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்” டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று, மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.