ஒவ்வொரு திரைப்படங்களிலும் ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்விக்க உள்ளன. அந்த வகையில் முன்னதாக வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொடர்ந்து விஜய் திருப்பதி மற்றும் டாப்சி இணைந்து நடித்திருக்கும் அனபெல் சேதுபதி திரைப்படம் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ரிலீசாகிறது. மேலும் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இயக்குனர் பார்த்திபன் இணைந்து நடித்திருக்கும் துகளக் தர்பார் திரைப்படமும் அடுத்து ரிலீசாகிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான துக்ளக் தர்பார் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக சன்டிவியில் ரிலீசாகிறது. வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை 6 மணிக்கு துக்ளக் தர்பார் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.இதன் முன்னோட்டமாக புதிய புரோமோ டீசர் வெளியாகியுள்ளது. தொடர்ந்து துக்ளக் தர்பார் நெட்ஃபிலிக்ஸிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.