பாலிவுட் திரையுலகில் கிஸ்ஸா குர்சி கா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சுரேகா சிக்ரி. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட் திரையுலகில் நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாது சின்னத்திரை தொடர்களிலும் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த மேடை நாடக கலைஞரான நடிகை சுரேகா சிக்ரி பாலிவுட் திரைத்துறையில் பல திரைப்படங்களில் நடித்து பல விருதுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக கடந்த 1988-ம் ஆண்டு வெளியான டமாஸ், 1995-ம் ஆண்டு வெளிவந்த மம்மோ, 2019-ம் ஆண்டு வெளியான பதாய் ஹோ உள்ளிட்ட திரைப்படங்களுக்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளியான கோஸ்ட் ஸ்டோரீஸ் என்னும் ஆன்தாலஜி வெப்சீரிஸிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஹிந்தியில் பிரபல தொலைக்காட்சி தொடரான C.I.D & பாலிகா வது உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர்.

இந்நிலையில் மாரடைப்பு காரணமாக சுரேகா சிக்ரி உயிரிழந்துள்ளார். 76 வயதான சுரேகா சிக்ரி இன்று அதிகாலை மாரடைப்பு உயிரிழந்துள்ளார். பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகையான திகழும் சுரேகா சிக்ரியின் மறைவுக்கு இந்திய திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.