தமிழ் சினிமாவின் பொக்கிஷமான நடிகர் வடிவேலு தனது நகைச்சுவை வசனங்கள் மட்டுமல்லாது உடல் மொழியாலும் ரசிகர்களை சிரிக்க வைத்து கவலைகளை மறக்க வைக்கும் நகைச்சுவை மருத்துவர். சமூக வலை தளங்களில் வலம் வரும் மீம் கிரியேட்டர்கள் அனைவருக்கும் கடவுளாக விளங்கும் வடிவேலுவை மீணடும் திரையில் காண பலகோடி தமிழ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

முன்னதாக இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி எனும் மெகாஹிட் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராக இருந்த இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தின்போது சில காரணங்களால் வடிவேலு நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததால் மீண்டும் நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என்ற அறிவுப்புகள் வெளியானது.

எனவே இம்சை அரசன் 24-ம் புலிகேசி விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தலைநகரம், மருதமலை, படிக்காதவன், அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகும் நாய் சேகர் படத்தில் நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடிக்கிறார்.

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் சுந்தர்சி நடித்து வெளிவந்த தலைநகரம் திரைப்படத்தில் நாய் சேகர் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து இருந்தார். முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு நாய் சேகர் எனும் படத்தின் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது நடிகர் வடிவேலு மீதான தடை நீங்கியதால் விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது என இயக்குனர் சுராஜ் அதிகாரப்பூர்வமாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

vadivelu is back with director suraj in naai sekar movie official announcement