தளபதி விஜய் மற்றும் சூர்யா மீது மீரா மிதுன் எனும் மாடல் வைத்த குற்றச்சாட்டுகள் சில தினங்களாக சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்யவே, மீரா மிதுன் ட்விட்டர் வீடியோ பதிவில் தரக்குறைவாக விமர்சனம் செய்தார். மீரா மிதுனின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. பலரும் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். 

நேற்று ஆகஸ்ட் 11-ம் தேதி இயக்குநர் பாரதிராஜா கடும் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரம் சர்ச்சையாகிக் கொண்டே இருக்க, சூர்யா தனது ட்விட்டர் பதிவில் 2018-ம் ஆண்டு வெளியிட்ட ட்வீட்டை மேற்கோள் காட்டியுள்ளார்.

அதில் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக்கொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்குச் செலவிடுங்கள். சமூகம் பயன் பெற என்று அந்த ட்வீட்டில் இருந்தது. மேலும், எனது தம்பி, தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கபூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். 

இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள் என்று சூர்யா தெரிவித்துள்ளார். சூர்யாவின் வேண்டுகோளைத் தொடர்ந்து, அவருடைய ரசிகர்கள் அமைதி காப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். 

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 

லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் வாடிவாசல் போன்ற படங்களின் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.