தமிழ் சினிமாவின் பிரபல இளம் நடிகையும் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளருமான நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கினார். மாமல்லபுரம் அருகே ஈசிஆர் சாலையில் நேற்று யாஷிகா ஆனந்த் பயணம் செய்த கார் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நடிகை யாஷிகா ஆனந்த் உடன் பயணம் செய்த அவருடைய நெருங்கிய தோழியான பவனி இந்தக் கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும்  விபத்தில் படுகாயமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து யாஷிகா ஆனந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நடிகை யாஷிகா ஆனந்த் இயக்குனர் & நடிகர் S.J.சூர்யா கதாநாயகனாக நடித்து வரும் கடமையை செய் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகர் S.J.சூர்யா யாஷிகா ஆனந்த் விரைவில் மீண்டு வர வேண்டி ட்விட் செய்துள்ளார். அந்தப் பதிவில், 

நண்பர்களே நம் அனைவருக்கும் யாஷிகா நல்ல அழகான பெண் என்பது தெரியும் ...அதே சமயம் அவர் சிறந்த நடிகையும் கூட… கடமையை செய் திரைப்படம் கட்டாயம் அவர்களுடைய திரைப் பயணத்தில் சரியான தொடக்கமாக இருக்கும்.

விரைவில் மீண்டு வாருங்கள் யாஷிகா உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறோம் 

என பதிவிட்டுள்ளார். முன்னதாக விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த் மீது அதி வேகமாக காரை ஓட்டியது, விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது