வைபவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அடுத்ததாக அமலாபால் நடித்து வெளிவந்த ஆடை திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.

இதனைத்தொடர்ந்து தனக்கே உரித்தான பாணியில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் குலு குலு. சந்தானத்துடன் அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் ,மரியம் ஜார்ஜ், லொள்ளுசபா மாறன், லொள்ளுசபா சேஷு, TSR ஆகியோர் குலு குலு படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பக்காவான காமெடி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியிருக்கும் குலுகுலு திரைப்படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட குலு குலு திரைப்படம் வருகிற ஜூலை 29-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

குலுகுலு திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளிவந்த குலுகுலு படத்தின் டீசர் மற்றும் மாட்னா காலி & அன்பரே ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், குலுகுலு திரைப்படத்தின் அடுத்த பாடலாக இன்னர் பீஸ் எனும் பாடல் தற்போது வெளியானது. ஜூலியான இன்னர் பீஸ் பாடல் இதோ…