சேலம் அருகே கலப்புத் திருமணம் செய்த தொழில் அதிபர் கடத்திக் கொலை செய்யப்பட்டார்.

சேலம் தாதகாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன், அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, தான் காதலித்து வந்த 23 வயதான ராஜகுமாரி என்ற பெண்ணை, கலப்புத் திருமணம் செய்தார்.

businessman kidnapped Murder

இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த மாதம் இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.  

இந்நிலையில், தொழில் அதிபர் மோகனுக்கு நேற்று பிறந்த நாள் என்பதால், தனது உறவினருக்கு போன் செய்து, கேக் வாங்கி வர சொல்லியிருக்கிறார். உறவினர் கேக் வாங்கி வீட்டிற்குச் சென்றபோது, மோகன் அங்கு இல்லை. இரவு நீண்ட நேரமாகியும் மோகன் வீட்டிற்கு திரும்பவில்லை.

இதனையடுத்து, மோகனின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் மோகனை தேடி வந்தனர். 

இந்நிலையில், சேலம் பைரோஜி பால் டிப்போ அருகில் மோகன் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அங்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தொழில் போட்டி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது கலப்புத் திருமணம் செய்ததால் கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சேலம் அருகே, தொழில் அதிபர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.