இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் சார்பட்டா பரம்பரை நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி வெளியானது. 1970-80களில் வடசென்னையில் பிரபலமான குத்துச்சண்டை கலாச்சாரத்தை கதைக்களமாக கொண்டு உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடிகர் ஆர்யா கபிலன் என்ற கதாபாத்திரத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார். அவருடன் இணைந்து கதாநாயகியாக நடிகை துஷாரா விஜயன் நடிக்க நடிகர்கள் பசுபதி, ஜான் விஜய், ஷபீர் கல்லாரக்கல், கலையரசன், சந்தோஷ் பிரதாப், காளி வெங்கட், G.M.சுந்தர், சஞ்சனா நடராஜன், அனுபமா குமார், ஜான் கொக்கென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சார்பட்டா பரம்பரையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. ரங்கன் வாத்தியாராக பசுபதி மொத்தக் கதையின் முதுகெலும்பாக தாங்கிப் பிடிக்கிறார். ஆக்ரோஷமான குத்துச்சண்டை வீரராகவும் தாய்க்கு அடிபணியும் மகனாகவும் கபிலன் கதாப்பாத்திரத்தில் ஆர்யா தன்னை அர்ப்பணித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

அந்த வகையில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இரண்டு முக்கியமான கதாபாத்திரங்கள் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டுள்ளன.  முதலாவதாக ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசும் ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரமாக படம் முழுக்க வலம் வரும் டாடி கெவின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜான் விஜய் அசத்தியிருக்கிறார். 

அடுத்ததாக, படத்தின் ஆரம்பத்தில் அதிகம் கவனிக்கப்படாமல் இருந்த ஒரு கதாபாத்திரம் திடீரென அனைவரது கவனத்தையும் தன் மேல் திருப்பியது என்றால் அது டான்ஸிங் ரோஸ் தான். பாக்ஸிங் ரிங்குக்குள் நடனமாடுவது போல் குத்துச் சண்டை போடுவது தனக்கே உரித்தான பாடி லாங்குவேஜ் வசனங்களை பேசுவது என நடிகர் ஷபீர் கல்லாரக்கல் டான்ஸிங் ரோஸாகவே வாழ்ந்திருக்கிறார். 

குறிப்பாக ரங்கன் வாத்தியாரான பசுபதி ஆர்யாவிடம் டான்ஸிங் ரோஸை பற்றி விளக்கும் காட்சியிலும் கபிலன் மற்றும் டான்ஸிங் ரோஸ் இடையிலான குத்துச்சண்டை போட்டியும் ரசிகர்களின் புருவத்தை உயர்த்தி மிரள வைத்தது. இந்நிலையில் தற்போது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த டான்ஸிங் ரோஸின் தீம் மியூசிக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வைரல் தீம் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.