மலையாள சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவர் நிவின் பாலி. 2010ஆம் ஆண்டு வெளிவந்த மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் நிவின் பாலி தொடர்ந்து மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவான நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறியப்பட்ட நிவின்பாலி நடித்த 1983, பெங்களூர் டேஸ், ஒரு வடக்கன் செல்பி போன்ற திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

 நிவின் பாலியின் திரைப்பயணத்தில்  மைல்கல்லாக அமைந்த திரைப்படம் “பிரேமம்” அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நிவின்பாலியின் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது. பிரேமம் திரைப்படம் தமிழ் திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடியது. மேலும் பிரேமம் திரைப்படத்தின் தாக்கத்தால் தெலுங்கு சினிமா பிரேமம் திரைப்படத்தின் உரிமம் பெற்று  இத்திரைப்படத்தை நாக சைதன்யாவை வைத்து ரீமேக் செய்தது. 

எதார்த்தமான கதாபாத்திரங்களுக்கு நடுவில் பல மாஸ் ஆக்ஷன் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார் நிவின் பாலி 2019ஆம் ஆண்டு நிவின்பாலி-நயன்தாரா இணைந்து நடித்த லவ் ஆக்சன் ட்ராமா திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் அடுத்து நிவின்பாலி நடிப்பில் வெளிவரவுள்ள  திரைப்படம் துறமுகம் . கடந்த ஆண்டு ஜனவரி மாதமே இத்திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளி போனது.

வெகு நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தின் டீஸர்  இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டபடி இன்று காலை 11 மணி அளவில் இத்திரைப்படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். நிவின் பாலியுடன் இந்திரஜித் சுகுமாரன், அர்ஜுன் அசோகன், பூர்ணிமா இந்திரஜித் மற்றும் பலர் நடிக்கின்றனர்.