மிக்ஜாங் புயல் காரணமாக ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தம்பித்து நிற்கும் சூழலில் அதன் நிவாரண பணிகளுக்காக தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறார். கடந்த 2015 ஆம் ஆண்டை போலவே இந்த 2023 ஆம் ஆண்டில் தற்போது மிக்ஜாங் புயல் சென்னைக்கு மிகப்பெரிய பாதிப்பை கொடுத்திருக்கிறது. இது மாதிரியாக சென்னைக்கு பாதிப்புகள் வருவதும் அதில் இருந்து சென்னை மீண்டு வருவதும் இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஆனால் 2015 ஆம் ஆண்டின் மழையின் அளவைவிட 2023 தற்போது அதிக அளவில் மழை கொட்டி தீர்த்து இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருக்கிறது. ஒருபுறம் தமிழ்நாடு அரசின் மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக இருந்தாலும் இந்த அதீத கன மழையால் ஏற்பட்ட சேதம் மிகப் பெரியது என்பதில் இந்த சந்தேகமும் இல்லை. இந்த நிலையில் நடிகர் ஹரீஷ் கல்யாண் சென்னை வெள்ளத்திற்கான நிவாரண உதவியாக ஒரு லட்ச ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறார். இது குறித்து தனது X பக்கத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையுடன் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதற்கான கடிதத்தையும் சேர்த்து வைத்து புகைப்படமாக வெளியிட்டு, "என்னுடைய பணிவான பங்களிப்பு... கை கோர்ப்போம்" என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். சென்னை வெள்ளத்திற்கான நிவாரணத்திற்கு நன்கொடை வழங்கியதற்காக நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நடிகர் ஹரிஷ் கல்யாணின் அந்த பதிவு இதோ...
My humble contribution.
— Harish Kalyan (@iamharishkalyan) December 6, 2023
கை கோர்ப்போம் #Chennai 💪#ChennaiFloodRelief #chennaifloods @CMOTamilnadu pic.twitter.com/CiqBV4SCsm
ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. எங்கு திரும்பினாலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. முழங்கால் அளவு, இடுப்பளவு, கழுத்தளவு என வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து மக்களை மிகுந்த அவதிக்கு உள்ளாக்கி இருக்கிறது. பல்வேறு இடங்களில் தரை தளம் முழுவதுமாக தண்ணீருக்குள் மூழ்கி இருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு உலுக்கிய கன மழையின் சீற்றத்தைக் காட்டிலும் இந்த முறை அதிக சீற்றம் ஏற்பட்டு இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக மழையின் அளவு 2015 காட்டிலும் அதிகமாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மறுபுறம் தமிழ்நாடு அரசின் மீட்பு பணிகளும் நிவாரண பணிகளும் மிகுந்த விறுவிறுப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போர்க்கால அடிப்படையில் பேரிடர் மீட்பு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தன்னார்வலர் தொண்டு நிறுவனங்களும் பல பொதுமக்களும் தாமாக முன்வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளான தண்ணீர் மற்றும் உணவு ஹெலிகாப்டர் மூலமாக ஒவ்வொரு இடங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை அருகாமையில் இருக்கும் மீட்பு முகாம்களில் கொண்டு சேர்த்து அவர்களுக்கு தேவையான அவற்றை அரசாங்கம் செய்து வருகிறது. இன்னும் பெரும்பான்மையான இடங்களில் வெள்ள நீர் வடியாமல் வெள்ளைக்காடாகவே சென்னை காட்சி அளிக்கிறது. சென்னையிலிருந்து புயல் தற்போது ஆந்திரா நோக்கி நகர்ந்திருக்கும் நிலையில் மழையின் அளவு குறைந்து இருக்கிறது. நாளை டிசம்பர் 7ஆம் தேதி சென்னையில் மழை இல்லை என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருக்கிறது. எனவே வெகு விரைவில் சென்னையில் சூழ்ந்திருக்கும் மழை நீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.