படிப்பில் கவனம் செலுத்துங்கள், திருமணம் பற்றி பிறகு யோசிக்கலாம் என்று இளம் பெண்ணுக்கு நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த இன்ப சத்யாவும், அதே பகுதியைச் சேர்ந்த பேபிகலாவும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இதற்கு பேபிகலா வீட்டில் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனையடுத்து, பேபிகலாவின் தந்தை குமார், தனது மகளை மீட்டு தரக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிடையில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதன்படி பேபிகலாவும், இன்ப சத்யாவும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆனார்கள். அப்போது, “தனது மகளுக்கு 18 வயது தொடரும் நிலையில், அவள் படிப்பை முடிக்க வேண்டியிருப்பதாக” குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக மகள் பேபிகலாவிடம் நீதிபதி கேட்டபோது, “இன்ப சத்யாவைக் காதலிப்பதாகவும், அவருடனே செல்ல விரும்புவதாகவும் கூறினார். அதே நேரத்தில், படிப்பையும் தொடர விரும்புவதாகவும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து இன்ப சத்யா கூறும்போது, “எங்கள் காதலுக்கு என் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், பேபிகலாவை திருமணம் செய்துகொண்டு, அவரை தொடர்ந்து படிக்க வைப்பேன்” என்றும் கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “பேபிகலா 18 வயது நிரம்பியவர் என்பதால், அவரது முடிவில் நீதிமன்றம் தலையிடாது. ஆனால், இன்ப சத்யாவிற்கு 19 வயது மட்டும் ஆவதால், அவர் சட்டப்படி 21 வயதில்தான் திருமணம் செய்துகொள்ள முடியும். அதுவரை, பேபிகலா 2 ஆண்டுகள் விடுதியில் தங்கி தனது படிப்பைத் தொடரட்டும். கல்லூரி படிப்பை முடித்ததும், பேபிகலாவின் தந்தை விரும்பும் பட்சத்தில், இருவீட்டாரும் பேசி திருமணம் செய்துகொடுப்பது தொடர்பாக முடிவு எடுக்கலாம் என்று கூறி உத்தரவிட்டு, நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

இதனிடையே, காதல் பிரச்சனையில், நீதிமன்றம் தலையிட்டுத் தீர்ப்பு வழங்கியுள்ளது, அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.