ரயிலின் கீழ் சிக்கி உயிர் தப்பிய பெண்!
By Arul Valan Arasu | Galatta | September 03, 2019 16:13 PM IST
கர்நாடகாவில் பெண் ஒருவர் ரயிலின் கீழ் சிக்கிய பின்னர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கர்நாடகா மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள சித்தப்பூர் ரயில் நிலையத்தில் வயதான பெண் ஒருவர், தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது, பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் திடீரென்று கிளம்பத் தொடங்கியது.
அப்போது, பிளாட் ஃபாம் மேடையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள், வயதான பெண்ணைப் பார்த்து கடுமையாகக் கூச்சலிட்டனர். மேலும், அந்த பெண்ணை அப்படியே தண்டவாளத்திலேயே படுத்துக்கொண்டு அசையாமல் இருக்குமாறும் கத்தினார்கள். இதனால், செய்வதறியாது தவித்த மூதாட்டி, பொதுமக்கள் கூச்சலிட்டதைக் காதில் வாங்கிக்கொண்டு, அப்படியே தண்டவாளத்தில் அசையாமல் படுத்துக்கொண்டார்.
ரயில் இறுதியாகச் சென்று முடிக்கும் வரையும், அசையாமல் படுத்திருந்த அவர், ரயில் சென்றதும், காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
உயிர் தப்பியதும் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த மூதாட்டி, பொதுமக்களின் சொல்படி செயல்பட்டு, தாம் உயிர் தப்பியதாகக் கூறினார். இதனிடையே, மூதாட்டி ரயிலின் கீழு் விழுந்து உயிர் தப்பிய வீடியோ, தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.