கடந்த 1999-ம் ஆண்டு வெளியான போபால் எக்ஸ்பிரஸ் திரைப்படம் மூலம் நடிகர் ஆனவர் டெல்லியை சேர்ந்த விஜய் ராஸ். மான்சூன் வெட்டிங் படத்தில் துபே என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்த விஜய் ராஸ் தமிழ் படத்திலும் நடித்தார். துரைசெந்தில் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து 2015-ம் ஆண்டு வெளியான காக்கி சட்டை படத்தில் வில்லனாக நடித்தார். 

அமித் மசுர்கர் இயக்கத்தில் வித்யா பாலன் வனத்துறை அதிகாரியாக நடித்து வரும் ஷேர்னி படத்தில் விஜய் ராஸும் நடித்துக் கொண்டிருக்கிறார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் 21ம் தேதி துவங்கியது.ஷேர்னி படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் நடந்து வருகிறது. 

இந்நிலையில் விஜய் ராஸ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக படக்குழுவை சேர்ந்த பெண் ஒருவர் மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் இருக்கும் ராம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விஜய் ராஸை கைது செய்தனர். பின்னர் அவர் கோண்டியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அன்றே அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

கோண்டியா போலீசார் கூறியதாவது, ஷேர்னி படக்குழு தங்கியிருக்கும் ஹோட்டலில் விஜய் ராஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண் திங்கட்கிழமை இரவு புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து நேற்று காலை விஜய் ராஸை கைது செய்தோம். உள்ளூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

அந்த பெண் அளித்த புகார் குறித்து எவிடென்ஸ் சேகரித்த பிறகே ராஸை கைது செய்தோம். விஜய் ராஸ் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதை பார்த்தவர்கள் எங்களிடம் இது உண்மை என கூறினார்கள் என்றார். 

இந்த செய்தி பாலிவுட் திரையுலக ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த 2020 வருடத்தில் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் விஜய் ராஸ். ஆயுஷ்மான் மற்றும் அமிதாப்பச்சன் நடித்த குலாபோ சித்தாபோ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடித்த லூட் கேஸ் என்ற படம் வெளியானது. அதைத் தொடர்ந்து வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் விஜய் ராஸ்.