கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் D43. ஜிவிபிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த பட்டாஸ் படத்தை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். க்ரைம் திரில்லரான இந்த படத்தில் ஷரஃபு மற்றும் சுஹாஸ் திரைக்கதை எழுதுகின்றனர். 

துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்தவர் கார்த்திக் நரேன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக நரகாசூரன் திரைப்படம் உருவானது. சில காரணங்களால் இப்படம் ரிலீஸாகாமல் இருந்தது. இயக்கம் தவிர்த்து கண்ணாடி எனும் படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு அருண் விஜய் மற்றும் பிரசன்னா வைத்து மாஃபியா எனும் படத்தை இயக்கினார். 

இந்த படத்தை தொடர்ந்து தனுஷுடன் கைகோர்த்துள்ளார். தனுஷ் எனும் ஆகச்சிறந்த கலைஞனை கார்த்திக் நரேன் எப்படி செதுக்கப்போகிறார் என்ற ஆர்வத்தில் உள்ளனர் திரை விரும்பிகள். கொரோனா அச்சுறுத்தல் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் D43 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து மதுரையில் நடக்கவிருக்கும் அத்ரங்கி ரே படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவிருக்கிறார் தனுஷ்.

இந்நிலையில் படத்தின் பாடல் ஆல்பம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் D43 ஆல்பம் நன்றாக வந்துகொண்டிருக்கிறது என பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியதும் பாடல்கள் குறித்த அப்டேட்டை பதிவு செய்கிறேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஜிவி பிரகாஷ். 

கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். தனுஷ் மற்றும் ஜிவி காம்போ ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாகி அமைந்தது. இந்த D43 படத்தில் தனுஷ் பாடல்கள் பாடியிருப்பதாகவும், பாடல் வரிகளும் எழுதியுள்ளதாக ஏற்கனவே ஜிவி பிரகாஷ் கூறியிருந்தார். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் திரை விரும்பிகள்.