பாலிவுட்டில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வரும் நடிகர் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இன்று (ஜூலை 29) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பையில் அந்தேரி பகுதியில் அமைந்துள்ள சித்ரகூட் மைதானத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் இயக்குனரான LUV ரஞ்சன் இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரதா கபூர் இணைந்து நடித்து வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சித்ரகூட் படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்று வந்தது. மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில், கடைசியாக ஒரு பாடலின் படப்பிடிப்பு இந்த தளத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

தீ விபத்து கண்டறியப்பட்ட உடனே படப்பிடிப்பு தளத்தில் இருந்து படக்குழுவினர் அனைவரும் வெளியேறியதால் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் படத்தில் பணியாற்றிய சில வேலையாட்கள் விபத்தில் சிக்கியதில் லேசான காயங்களோடு மீண்டு வந்துள்ளனர்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரதா கபூர் இருவரின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.