பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தொடங்கப்பட்டது. லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா இந்தியன்-2 திரைப்படத்தை தயாரித்தார்.இந்தியன்2 திரைப்படத்தில் நடிகர்கள் சித்தார்த், நெடுமுடி வேணு, பாபிசிம்ஹா, சமுத்திரக்கனி ரகுல் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்திவருகின்றனர். 

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் இந்தியன்2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர்கள் ரவிவர்மன் மற்றும் ரத்னவேலு ஆகியோர் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக தயாராகி வந்த இந்தியன் 2 திரைப்படம் க்ரைன் விபத்து, ஊரடங்கு என பல காரணங்களால் தடைபட்டது

இதற்கிடையில் இயக்குனர் ஷங்கர் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் அறிவிப்புகளை வெளியிட லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இயக்குனர் ஷங்கர் மீது வழக்கு பதிந்தது. இந்தியன்-2 திரைப்படத்தை முடிக்காமல் வேறு எந்த திரைப்படத்தையும் இயக்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் இயக்குனர் ஷங்கரை பதில் மனு அளிக்கும்படி உத்தரவிட்டது. 

அதன்படி இயக்குனர் ஷங்கர் அவர் தரப்பு நியாயங்களையும் படப்பிடிப்பு தடைபட்டதற்கான சரியான காரணங்களையும் எடுத்துவைத்து பதில் மனு அனுப்பியிருந்தார். பின்னர் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி இயக்குனர் ஷங்கர் மற்ற திரைப்படங்களை இயக்க அனுமதி அளித்து, லைகா புரொடக்ஷன்ஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. 

அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம்சரணுடன் இணைந்து புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். தொடர்ந்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் ரன்வீர் சிங்குடன் இணையும் இயக்குனர் ஷங்கர் தமிழில் மெகா ஹிட்டான அந்நியன் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்க உள்ளார். இத்திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான பெண் மூவிஸ் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.