விஜய் தொலைக்காட்சியின் தொடர்களிலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலமும் மிகப் பிரபலம் அடைந்தவர் நடிகர் கவின். முன்னதாக விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான தொடர்களில் ஒன்றான சரவணன் மீனாட்சி மெகா தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர்.

பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி அனேக தமிழ் பிக் பாஸ் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறாவிட்டாலும் ரசிகர்களின் மனதை வென்றார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் கவின் கதாநாயகனாக நடித்த திரைப்படம் லிஃப்ட்.

ஈகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் ஹெப்ஸி தயாரித்திருக்கும் லிஃப்ட் திரைப்படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்க, பிகில் திரைப்படத்தில் தென்றலாக அசத்திய நடிகை அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் வினித் வரப்பிரசாத் எழுதி இயக்கியுள்ள ஹாரர் த்ரில்லர் திரைப்படம் லிஃப்ட்.

பிரபல தயாரிப்பாளரான லிப்ரா புரொடக்ஷன்ஸ், ரவீந்தர் சந்திரசேகரன் லிஃப்ட் திரைப்படத்தை வெளியிடுகிறார். லிஃப்ட் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இத்திரைப்படம் OTT-யில் வெளியாகலாம் என சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவியது. இந்நிலையில் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் முக்கியமான அறிவிப்பு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

இந்த பதிவில், லிஃப்ட் திரைப்படம் கட்டாயமாக 100% இருக்கைகளுடன் திரையரங்குகளில் வெளியாகும்...தயவுசெய்து OTT-யில் வெளியாகும் என்கிற வதந்திகளை நம்ப வேண்டாம். பிரபல சவுண்ட் இன்ஜினியர் டப்பாஸ் நாயக் லிஃப்ட் படத்தின் முக்கியமான சிறப்பு ஒலிப்பதிவில் பணியாற்றி வருகிறார். எனவே கட்டாயமாக லிஃப்ட் தியேட்டரில் காண வேண்டிய திரைப்படம் எனவும் தெரிவித்துள்ளார். 

ஊரடங்கு தளர்வுகளில் ஒரு பகுதியாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டால் 50 % இருக்கைகளோடு அனுமதிக்கப்படும் என்கிற நிலையில் 100 % இருக்கைகளோடு திரையரங்குகள் திறக்கப்படும் பொழுது கட்டாயமாக திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.