தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் பிரபலமானவர் ஆரவ். அதன் பிறகு அவரை தேடி பட வாய்ப்புகள் வரவே நடிப்பதில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் நடிகை ராஹீ என்பவரை ஆரவ் காதலிப்பதாகவும், அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. 

திருமணம் குறித்து ஆரவ் எதுவும் கூறவில்லை. அதனால் இது வதந்தியாக இருக்கும் என்று ஓவியா ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் இது வதந்தி இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. நிஜமாகவே இன்று ஆரவுக்கும், ராஹீக்கும் இனிதே திருமணம் நடந்துள்ளது. திருமணத்தில் பிக் பாஸ் பிரபலங்களான ஆர்த்தி, சினேகன், காயத்ரி, பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், சுஜா வருணி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஆரவ் திருமணத்தின்போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஆர்த்தி. அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆரவ்-வின் காதலி ராஹி, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் ஜோஷ்வா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் ஆடை வடிவமைப்பாளரும் கூட. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கொரு காதலி இருப்பதாக ஆரவ் சொன்னது இவரைத்தான் என்றும் அவர் நண்பர்கள் தெரிவித்திருந்தனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா, ஆரவ் இடையே காதல் ஏற்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் இருவரும் காதலை தொடர்ந்தார்கள், ஜோடியாக ஊர் சுற்றினார்கள். அவர்கள் ஜோடியாக வெளிநாட்டிற்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. ஆரவின் ராஜபீமா படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் கூட ஆடினார் ஓவியா. ஆனால் இருவரும் சிறந்த நண்பர்களாக இருந்துள்ளனர். 

காதலியை திருமணம் செய்த ஆரவுக்கு தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள். இந்த அழகான ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா. 

ஆரவ் கைவசம் ராஜபீமா திரைப்படம் உள்ளது. நரேஷ் சம்பத் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஆரவ், யோகிபாபு, ஆஷிமா நர்வால், யாஷிகா ஆனந்த், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். ஓவியா இந்த படத்தில் கௌர தோற்றத்தில் நடித்துள்ளார். சைமன் கே கிங் இசையமைத்துள்ளார். சதீஷ்குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.